அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
-என்பது வள்ளுவர் வாக்கு,காசு அதிகமாக இருக்கிறது என்று ஆட்டம் போட்டால் காணாமல் போய்விடுவாய். எனவே அடக்கமாக இரு. அதுதான் உன்னை உயர்த்தும். இல்லையேல் அழிந்து காணாமல் போவாய் என்று இதன் மூலம் திருவள்ளுவர் திமிர் பிடித்தவர்களை எச்சரிக்கிறார்.
இந்த எச்சரிக்கை, இப்போது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, நடிகர் விஜய்க்கு நூற்றுக்கு நூறு பொருந்துகிறது.
பத்து படத்திலே நடித்துவிட்டால், நடிகனான தன்னைப் பார்க்க கூட்டம் கூடிவிட்டால், உடனே அரசியல் கட்சியைத் தொடங்கி, மறுநாளே ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று, சிலர் கனவு காணுகிறார்கள்.
இந்தக் கனவு எம்.ஜி.ஆருக்கு வேண்டுமானால் பலித்திருக்க லாம். எம்,ஜி,ஆர். செல்வாக்கில் ஜெயலலிதாவுக்கும் கூட இந்தக் கனவு, கை கொடுத்திருக்கலாம். இவர்களைப் பார்த்து, நாமும் சினிமா கவர்ச்சி மூலம் அதிகாரத்தில் அமரலாம் என்று அரிதாரம் பூசும் எவராவது கருதினால், அவர்கள் தோல்வியைத் தான் சந்திப்பார்கள்.
அரசியலுக்கு வந்த மகா நடிகரான நடிகர் திலகம் சிவாஜியாலேயே அரசியலில் வெற்றிபெற முடியவில்லை. சினிமா கவர்ச்சியை மூலதனமாக நினைத்து அரசியலுக்கு வந்த சரத்குமார், இப்போது பத்தோடு பதினொன்றாக நின்றுகொண்டிருக் கிறார்? சினிமா புகழோடு, தனது பேச்சாற்றலும் கை கொடுக்கும் என்று அரசியல் மேடைகளில் கர்ஜிக்கும் சீமானின் நிலை என்ன? தமிழகத்தில் இருக்கும் உதிரிக் கட்சிகளின் வரிசையில்தான் இப்போது வரை அவரது கட்சியால் நிற்கமுடிகிறது.
இவர்களை எல்லாம் பார்த்தும் பாடம் கற்காத விஜய், சினிமா மோகத்தால் கூடும் கூட்டத்தையும், தனக்கு இருக்கும் கரன்ஸி பலத்தையும் வைத்துக்கொண்டு, அரசியல் களத்தில் திமிரோடு விளையாடுகிறார். ஆணவத்தோடு ஆட்டம் போட்டுவருகிறார்.
நடிகரான விஜய் அரசியலுக்கு வரக்கூடாது என்று நாம் சொல்லவில்லை. அதற்கு முன்பு, அரசியலுக்கு வருவதற்கான பண்புகளை அவர் கற்றுக்கொள்ள வேண்டும். மக்களை மதிப்பது எப்படி என்பதை அவர், நம் தலைவர்களிடம் இருந்து அனுபவப் பாடமாக அறிந்துகொள்ள வேண்டும்.
"மக்களிடம் செல், மக்களோடு வாழ், மக்களிடமிருந்து கற்றுக் கொள், மக்களுக்குச் சேவையாற்று'
-இதுதான் தன் கட்சி நிர்வாகிகளுக்கு அறிஞர் அண்ணா போதித்த திருவாசகம்.
மக்களிடம் இறங்கிச் செல்லாமல் கேரவனிலேயே இருப்பதும், மக்கள் மத்தியில் வாழமுயலாமல் "பவுன்சர்களின்' பாதுகாப்பு வளையத்திற்குள்ளேயே இருப்பதும், மக்களிடம் இருந்து எதையும் கற்றுக் கொள்ள முயலாமல், தனக்கு எழுதிக்கொடுக்கும் வசனத்தை எகத்தாளமாகப் பேசி ஆர்ப்பரிப்பதும், மக்களுக்காக சேவை செய்யாமல், தனது ரசிகர்களை அடிமைகளாய் ஆக்க நினைப்பதும், அரசியலுக்கான அரிச்சுவடி ஆகாது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/08/editorial-2025-11-08-16-21-19.jpg)
எந்தவித அனுபவமும் இல்லாமல்- மக்களை எப்படி மதிக்கவேண்டும் என்கிற பண்பைக் கூடப் பெறாமல் அரசியல் மேடைகளில் ஆட்டம்போட்டு வருகிறார் விஜய்.
அவரது, திமிரடியான அரசியல் ஆட்டம்தான், கரூரில் 41 பேரின் உயிரைக் குடித்திருக்கிறது. ஏராளமானோரை மருத்துவமனைக்கு அனுப்பியது.
உங்கள் வீட்டில் ஒரு உயிர் போய்விட்டதா? உங்களுக்கு 20 லட்ச ரூபாய். கைகால் போய்விட்டதா? உங்களுக்கு ஒரு ரேட் என்று, கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங் களிடம் ஒரு மரண வியாபாரி யைப்போல் கரன்ஸியை வாரி இறைத்திருக்கிறார் விஜய்.
கரன்ஸியால், உறவுகளை இழந்தோரின் கண்ணீரை முழுதாகத் துடைக்க முடியும் என்று விஜய் நினைக்கிறார்.
பாதிக்கப்பட்டவர்கள் குறைந்தபட்சம் அவரிடம் எதிர்பார்த்தது, அக்கறையான ஆறுதலை. அவர்களைத் தேடிச்சென்று அந்த ஆறுதல் வார்த்தையைச் சொல்லக்கூட விஜய்யால் முடியவில்லை.
இப்போது, இந்த கரூர் விவகாரம் பலவிதமாக திசைமாற்றப்பட்டு வரும் நிலையில், அதற்குள் நாம் போகத் தேவையில்லை.
"அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்' என்கிற சிலப்பதிகார வரிகள், நிச்சயம் பலிக்கும். வினை விதைத்தவன் வினையை அறுவடை செய்தே தீருவான்!
இங்கே நாம் சொல்ல வருவது, அரசியலுக்கு வருகிறவர்கள் மக்களை எப்படி மதிக்கவேண்டும் என்பதைத்தான்.
நமக்குத் தெரிந்த உறவினர் வீட்டில் துக்க சம்பவம் நடந்தால் நாம் என்ன செய்வோம்.
நேராக அவர்கள் வீட்டிற்குச் சென்று ஆறுதல் சொல்வோம். இதுதான் பண்பாடு. அதற்கு மாறாக பாதிக்கப்பட்டவர்களை, "நான் சொல்லும் இடத்திற்கு வாருங்கள். உங்களுக்கு நான் ஆறுதல் சொல்லவேண்டும்' என்று அவர்களை அழைப்பது என்ன மாதிரியான பண்பாடு?
தன்னால் நடந்த உயிர்ப் பலிகள் பற்றிக் கொஞ்சமும் உறுத்தல் இல்லாத விஜய், உறவுகளை இழந்த குடும்பத்தினரை மாமல்லபுரத்திற்கு வரவழைத்து ஆறுதல் சொல்லும் நாடகத்தை நடத்தியிருக்கிறார். இதை ஏற்கமுடியாத, ரமேஷ் என்பவரின் மனைவி சங்கவி தங்களுக்கு விஜய் கொடுத்த 20 லட்சத்தைத் திருப்பி அனுப்பிய சம்பவமும் நடந்திருக்கிறது.
இதுவரை அரசியல் தலைவர்கள் எவரும், பாதிக்கப்பட்ட மக்களை வரவழைத்து ஆறுதல் சொன்னதில்லை. சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவெல்லாம் இப்படியா நடந்துகொண்டார்கள்?
எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, 1979 ஜூலை 29 ஆம் தேதி, தூத்துக்குடியில் ஒரு பெரும் துயர சம்பவம் நடந்தது.
தூத்துக்குடி லூர்தம்மாள் புரத்தில், ஓலையால் அமைக்கப்பட்டிருந்த லட்சுமி டாக்கீஸில் அன்று நடிகர் திலகம் சிவாஜி நடித்த பாவமன்னிப்பு திரைப்படம் ஓடிக் கொண்டிருந்தது. மேட்னி ஷோ. ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக 300-க்கும் மேற்பட்டோர் தியேட்டரில் இருந்தனர். ஓலைக் கூரையால் அமைக்கப்பட்ட தியேட்டர் என்பதால், வெளிவெளிச்சம் உள்ளே வரக்கூடாது என்று, கூரை மீதும் தார்ப்பாயைப் போட்டு மூடியிருந்தார்கள்.
அப்போது திடீரெனத் தீப்பிடித்தது. மக்கள் சுதாரிப்பதற்குள் மளமளவென நெருப்பு அவர்களைச் சுற்றி வளைத்தது. கூரைமீதிருந்த தார்ப்பாயும் அவர்களை அழுத்தியது.
அதையும் மீறி வெளியே ஓடிவந்த பெண்கள், தங்கள் ஆடை தீயில் எரியும் நிலையில், தங்கள் உடல் அப்பட்டமாகத் தெரிவதாக எண்ணி, மானமே பெரிது என்று திரும்பவும் தீப்பிடித்த தியேட்டருக்குள் ஓடினர். எரியும் தீயில் துடிதுடித்துக் கருகினர். ஆண்கள் சிலர் தப்பினர் எனினும் அந்த விபத்தில் 115 பேர் இறந்துபோனார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்து தூத்துக்குடி,மதுரை போன்ற மருத்துவமனைகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
இந்த விபத்து ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது.
அப்போது பதறிப்போன முதல்வர் எம்.ஜி.ஆர்., உடனே தூத்துக்குடிக்கு தனது அமைச்சர்கள் சிலரோடும் அதிகாரிகளோடும் விரைந்தார். இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு நேரில் கண்ணீரோடு ஆறுதல் சொன்னார். அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கினார்.
மருத்துவமனைகளில் காயத்தோடு அனுமதிக்கப்பட்ட மக்களைப் போய்ப் பார்த்தார். வாழை இலையில் படுக்க வைக்கப்பட்டிருந்த அவர்கள் மீது, ஈயும் கொசுவும் மொய்ப்பதைக் கண்டு அவர்களுக்கு கொசு வலைகளை உடனடியாக ஏற்பாடு செய்தார். கலங்கிய நிலையில், எல்லோருக்கும் ஆறுதல் சொன்னார்.தேவையான நிவாரண உதவிகளையும் வழங்கினார்.
அந்தத் தீவிபத்தில், ஒரு கர்ப்பிணிப் பெண்ணை, தனது உயிரைப் பொருட்படுத்தாமல் உள்ளே சென்று தூக்கிவந்து காப்பாற்றிய ஒருவருக்கு அங்கேயே பரிசினையும் அளித்தார் எம்.ஜி.ஆர். இதுதான் எம்.ஜி.ஆர். வெளிப்படுத்திய உள்ளார்ந்த அக்கறை. உயர்ந்த பண்பாடு.
அவர், பாதிக்கப்பட்டவர்களை அழைத்துவரச் செய்து ஆறுதல் கூறவில்லை.
ஜெயலலிதாவுக்கும் நமக்கும் எவ்வளவோ கருத்து முரண்பாடுகள் இருக்கலாம். எனினும் அவர்கூட, விஜய் பாணியைக் கடைப்பிடிக்கவில்லை என்பதை நாம் சொல்லியாக வேண்டும்.
2010 மார்ச்சில் பென்னாகரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது.
இதில் அ.தி.மு.க. வெற்றிபெறும் என்று பலரும் நினைத்தார்கள். ஆனால், அதற்கு மாறாக தி.மு.க. சார்பில் களமிறங்கிய இன்பசேகரன் வெற்றிபெற்றார்.அங்கே அ.தி.மு.க. படுதோல்வி அடைந்து டெபாசிட்டை இழந்ததோடு, மூன்றாம் இடத்துக்கு அது தள்ளப்பட்டது. அங்கே பா.ம.க. இரண்டாம் இடத்துக்கு வந்திருந்தது. இந்தத் தோல்வியை ஜீரணிக்க முடியாமல், ஈரோட்டைச் சேந்த அ.தி.மு.க . உறுப்பினரான தங்கவேலு என்பவர் தீக்குளித்தார். இதில் அவர் உயிர் பிழைத்தாலும் காயங்களுடன் ஈரோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தனக்காகவும் தன் கட்சிக்காகவும் இப்படியொரு முடிவை எடுத்த அந்தத் தொண்டனைப் பார்க்க ஜெயலலிதா, ஈரோடு சென்றார். மருத்துவமனையில் இருந்த தங்கவேலுவைப் பார்த்து ஆறுதல் கூறினார்.அவர் மனைவி வசந்திக்கும் தைரியமூட்டினார்.
அந்தக் குடும்பத்திற்குத் தேவையான உதவிகளைச் செய்தார். பாதிக்கப்பட்டவர்களைத் தேடிச்சென்று உதவியதுதான் நாகரிகம்.
திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்த தே.மு.தி.க. தலைவரான நடிகர் விஜயகாந்தும், இதுபோன்ற பண்புகளைப் பெற்றிருந்தார். 2017 அக்டோபரில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 100-க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர் மருத்துவமனையில் அட்மிட் ஆன செய்தியை அறிந்து, அங்கே ஓடோடிச் சென்று, பாதிக்கப்பட்டவர் களுக்கு ஆறுதல் சொன்னார்.
அதேபோல் 2018 நவம்பரில் கஜா புயல் தாக்கியபோது, கடுமையான பாதிப்புகளைச் சந்தித்த கடலூர் பகுதி மக்களை அவர் ஓடிப்போய் சந்தித்தார். தங்கள் கட்சியின் சார்பில் நிவாரண உதவிகளையும் வழங்கினார். விஜய்யைப் போல் அவர், யாரையும் வரவழைத்து ஆறுதல் கூற வில்லை.
அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல; திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்த தலைவர்களும் கூட பாதிக்கப்பட்ட மக்களைத் தேடிச் சென்று தான் ஆறுதல் கூறினார்கள். அதுதான் நாகரிகம்.
இந்த அடிப்படை நாகரிகம்கூட தெரியாத விஜய், அரசியல் களத்தில் இன்னும் எப்படியெல்லாம் ஆட்டம் போடப் போகிறாரோ? என்கிற கவலை நம்மைப் போன்றவர்களுக்கு ஏற்படுகிறது. காரணம், வேண்டுமென்றே அவரையும் அவரது அசட்டுத்தனங்களையும் அடாவடி களையும் சிலர் கூச்சமில்லாமல் கைதட்டி ஆதரித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
இதில் இன்னொரு கேள்வியும் குடைகிறது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் அவரை வெளியில் விட்டால், தன் பண பலத்தாலும் அதிகார பலத்தாலும் சாட்சிகளைக் கலைத்துவிடுவார் என அமலாக்கத்துறை வாதிட்டது. ஆனால் இதே பார்வையை ஏன் விஜய் பக்கம் எவரும் வீசவில்லை?
விசாரணைகள் தொடங்குவதற்கு முன்பே, கூட்ட நெரிசலில் இறந்தவர்களுக்கு தலா 20 லட்ச ரூபாய் வீதம், அவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் என்று அறிவித்தார் விஜய். சொன்னது போலவே, சம்மந்தப்பட்ட குடும்பத்தினரின் வங்கிக் கணக்குகளில் பணத்தையும் வரவு வைத்தார். இது, பாதிக்கப்பட்டவர்களின் வாயை அடைக்கும் முயற்சி ஆகாதா? இது போதாதென்று, ஜேப்பியார் கல்விக் குழுமத்தினர், விஜய்க்கு ஆதரவாக நின்றுகொண்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மாதம் 5000 ரூபாய் வீதம் 20 ஆண்டுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். அவர்கள் குடும்பப் பிள்ளைகளின் படிப்புக்கு உதவுவதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.
இது தவிர, ஆறுதல் கூற அழைக்கிறேன் என்ற சாக்கில், மாமல்லபுரம் ஃபோர் பாய்ண்ட்ஸ் ஹோட்டலுக்கு அழைத்து, பாதிக்கப்பட்ட குடும்பத் தரப்பிற்கு 1.85 கோடி ரூபாய் மதிப்பிற்கு காப்பீடு வழங்குவதாகவும் அறிவித்திருக்கிறார்கள். இப்படி ஏறத்தாழ 14 கோடி ரூபாய் அளவிற்கு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வாரி வழங்குகிற விஜய்யின், இந்த தொகையெல்லாம் லஞ்சப்பணம் ஆகாதா? இவையெல்லாம் சாட்சிகளைக் கலைப்பதாக ஆகாதா? இது குறித்தெல்லாம் சி.பி.ஐ. தரப்போ நீதித்துறையோ கேள்வி கேட்காதா?
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் ஒன்றிய அரசும் சரி, மாநில அரசும் சரி விஜய் தரப்பிடம் உரிய தீவிரத்துடன் நடந்து கொள்ளாமல் நீக்குப்போக்காகவே நடந்துகொள்கின்றன. இதனால் கரூர் கூட்டநெரிசல் விவகாரத்தில் பாடம் படிக்கவேண்டிய விஜய், மேலும் மேலும் ஆட்டம் போடுவார். இதைத் தவிர பெரிதாக என்ன மனமாற்றம் அவரிடம் ஏற்பட்டுவிடப் போகிறது.
கவலையோடு,
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/08/vijay-2025-11-08-16-20-52.jpg)